திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல்

Posted on

திருந்திய நெல் சாகுபடி மூலம் அதிக மகசூல் பெறலாம் என கோபி வேளாண் உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.

 

ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளுக்கு நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திருந்திய நெல் சாகுபடி என்ற ஒற்றை நாற்று நடவு முறை, நெல் பயிரிடுதலில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன முறையாகும். இம் முறை குறித்து கோபி வேளாண் உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளது:

 

ஈரோடு மாவட்டம், கோபி வட்டாரத்தில் அதிக அளவில் திருந்திய நெல் சாகுபடி முறையில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த முறையில் இளம் நாற்று நடுவதால் நன்கு வளர்கிறது. வேர்களின் வளர்ச்சி அதிகமாகி, அதிக தூர்கள் வெடிக்கின்றன.

 

அறுவடை வரை இலைகள் பசுமையாக இருப்பதால் சூரிய ஒளிச்சேர்க்கை கடைசி வரை நன்றாக இருக்கிறது. ஏற்கெனவே கிடைத்த மகசூலைவிட இந்த முறை மூலமாக கூடுதல் மகசூல் கிடைக்கிறது. மிகவும் எளிமையான, சிக்கனமான இந்த தொழில்நுட்பத்தால் ஏக்கருக்கு குறைந்தது 500 கிலோ கூடுதல் மகசூல் கிடைக்கிறது.

 

விதையளவு: திருந்திய நெல் சாகுபடிக்கு குறைந்த அளவு நெல் விதைகள் போதுமானது. ஒரு ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோ விதை தேவைப்படுகிறது.

 

நாற்றங்கால் அமைத்தல்: நீர் நிலைக்கும் நடவு வயலுக்கும் அருகில் நாற்றங்கால் இருப்பது நல்லது. ஒரு ஏக்கர் பரப்பளவில் நாற்றுகள் நடவு செய்ய ஒரு சென்ட் பரப்பளவு நிலம் போதுமானதாகும். உழுது சமன்படுத்தப்பட்ட நிலம் 4 அடி அகல பாத்திகளாக ஒன்றரை அடி இடைவெளியில் அமைக்க வேண்டும்.

 

வயல்களில் களி மண் விகிதம் அதிக அளவில் இருந்தால் மணல் கலக்கலாம். 20 சதவீத நன்கு மக்கிய தொழு உரத்தை 10 சதவீத தவிடு, ஒன்றரை கிலோ பொடியாக்கப்பட்ட டைஅமோனியம் பாஸ்பேட் அல்லது 2 கிலோ 17:17:17 காம்ப்ளக்ஸ் உரத்துடன் கலந்து நாற்றங்கால் அமைக்கும் இடத்தின் மீது பரப்பி நாற்று பாத்திகளை அமைக்க வேண்டும்.

 

நாற்றங்காலைப் பாதுகாத்தல்: விதையை ஒருநாள் முழுவதும் ஊற வைத்து பின்பு வடிக்கட்டி, ஒருநாள் நிழலில் முளைகட்ட வைத்த பிறகு, அந்த விதையை சீராகத் தூவி விடவேண்டும். நெல் விதை மீது சீராக மணல் அல்லது தொழு உரத்துடன் கலந்த மண்ணைத் தூவிய பிறகு தண்ணீர் தெளிக்க வேண்டும்.

 

அதிக வெயிலில் இருந்து நாற்றைப் பாதுகாக்க நாற்றங்காலை வைக்கோல் மூலமாக மூடி வைப்பது நல்லது.

 

இவ்வாறு நாற்றங்காலில் வளர்க்கும்போது 14 முதல் 15 நாள்களில் நடவு செய்வதற்கு ஏற்ற வகையில் நாற்றுகள் வளர்ந்து நிற்கும்.

 

நடவு வயல்: ஒரேயொரு நாற்றை எடுத்து மண்ணின் மேற்பரப்பில் மேலாக நடவு செய்ய வேண்டும். 10 அங்குலத்திற்கு 10 அங்குலம் நடவு செய்ய வேண்டும்.

 

அவ்வாறு நடவு செய்ய ஒரு கயிற்றில் ஒவ்வொரு 10 அங்குலத்திற்கும் அடையாளம் வைத்து நடவு செய்யலாம் அல்லது சமன் செய்யப்பட்ட வயலில் 10 அங்குலத்திற்கு குறுக்காகவும் நெடுக்காகவும் மார்க்கர் கருவியால் கோடுகள் ஏற்படுத்தி, அக்கோடுகள் சந்திக்கும் இடங்களில் நடவு செய்து சரியான வரிசையை ஏற்படுத்தலாம்.

 

நாற்றுகள், பாத்திகளிலிருந்து பறித்த 30 நிமிஷங்களில் நடவு செய்ய வேண்டும். அசோஸ்பைரில்லம் மற்றும் சூடோமோனாஸ் புரெசன்ஸ் கலவையில் 20 நிமிஷம் வேரை நன்கு நனைத்து பின்னர் நடவு செய்ய வேண்டும்.

 

நீர் மேலாண்மை: மண் மறைய நீர் கட்ட வேண்டும். இதனை 10 நாள்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும். அதன் பின்னரே நீர்ப் பாய்ச்ச வேண்டும். இதையே பயிர் பருவம் வரை பின்பற்ற வேண்டும்.

 

நடவு செய்த 10, 20, 30, 40 நாள்களில் அதாவது 10 நாள்கள் இடைவெளியில் கோனோவீடர் என்னும் களைக்கருவி உருளை மூலமாக வயலில் முன்னும் பின்னும் உருட்ட வேண்டும். அவ்வாறு செய்வதால் மண்ணில் இளக்கம் ஏற்பட்டு வேர்களில் காற்றோட்டம் அதிகரித்து, அதிக எண்ணிக்கையில் தூர்கள் உருவாகின்றன.

 

மேலும், தூர்கள் அனைத்திலிருந்தும் ஒரே நேரத்தில் திடமான கதிர்கள் வெளிவருகின்றன. அதனால், பதர்கள் இல்லாத நல்ல எடை உள்ள திரட்சியான நெல் மணிகள் உருவாகி அதிக மகசூல் கிடைக்கிறது.

 

இந்த முறையில் அதிக காற்றோட்டமும், வெளிச்சமும் பயிர்களுக்கு கிடைப்பதால் எலித் தொல்லை குறைவதுடன், பூச்சி நோய்த் தாக்குதலும் குறைந்து சாகுபடிச் செலவும் கட்டுப்படுகிறது.

 

மேலும், திருந்திய நெல் சாகுபடி அனைத்துப் பருவங்களுக்கும், இப்போது நடைமுறையில் உள்ள அனைத்து ரகங்களுக்கும் ஏற்றது.

 

இதுகுறித்த தொழில்நுட்ப விவரங்களுக்கு கோபி மற்றும் தூக்கநாயக்கன்பாளையம் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களை அணுகலாம்.

nanri velanmai thakaval udagam

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s