மஞ்சள் சாகுபடி தொழில்நுட்பங்கள்

Posted on

மஞ்சள் சாகுபடி தொழில்நுட்பங்கள்

திருநெல்வேலி: மஞ்சள் சாகுபடி முறைகள் குறித்து சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி  இயக்குநர் தி.சு.பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மஞ்சள், நம் வாழ்வின் மங்கல நிகழ்வுகளிலும், இறை வழிபாட்டிலும் இரண்டறக் கலந்த ஒன்றாகும். சமையலிலும், மருத்துவத்திலும் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. உலக மஞ்சள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 2,500 ஆண்டுகளாக இது பயிரிடப்பட்டு, இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதத்திலும், சித்த  மருத்துவத்திலும் மகத்தான பங்கு வகிக்கிறது. “குர்குமா டொமெஸ்டிகா’ என்ற  தாவரவியல் பெயரைக் கொண்ட மஞ்சளின் மருத்துவ மகிமைகள் ஏராளம்.

மருத்துவ மகிமைகள்: மஞ்சள் நல்லதொரு கிருமி நாசினி என்பதால் வெட்டுக் காயங்களும், தீக்காயங்களும் விரைவில் குணமாக உதவுகிறது. புண்களைக் குணமாக்குவதில் பக்கவிளைவின்றி செயல்படுகிறது. இயற்கையான வலி நிவாரணி. செரிமானக் குறைபாடுகளை நீக்குகிறது. கொழுப்புச் சிதைவில் உதவி சீரான எடைக் குறைப்புக்கு உறுதுணையாகிறது. இயற்கையான முறையில் கல்லீரல் நச்சை நீக்குகிறது. தோல் நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. வயது முதிர்வைத் தடுக்கிறது.

மன இறுக்கத்துக்கு மருந்தாக சீன மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாதவிடாய்க் கோளாறுகளை சரிசெய்கிறது. நோய் எதிர்ப்பு  சக்தியைக் கொடுக்கிறது. பல்வகைப் புற்றுநோய்கள் வருவதைத் தடுக்கவும், அவை  பரவுவதை தள்ளிப்போடவும் செய்கிறது. எலும்புச் சிதைவு நோய்க்கு அணை போடுகிறது. வயது முதிர்வின் காரணமாக வரும் “அல்சீமியர்’ என்ற மறதி நோயைத் தடுக்கவும், தாமதப்படுத்தவும் உதவுகிறது.

இத்தகைய மருத்துவப் பயன்கள் கொண்ட மஞ்சள் பயிர், தைப்பொங்கல் மஞ்சள்  குலைகளுக்காகவும், மஞ்சளுக்காகவும் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயிரிடப்படுகிறது.

சாகுபடி முறைகள்: ரகங்கள் – கோ-1, பவானிசாகர்-1, 2, ரோமா, சுவர்ணா, சுதர்ஷயா, ரங்கா, ராஷ்மி, ராஜேந்திர சோனியா, கிருஷ்ணா, சுகுணா, சுகந்தம், சுரோமா, ஆலப்புழா, ஐஐஎஸ்ஆர் பிரதிபா, ஐஐஎஸ்ஆர் ஆலப்பி, ஐஐஎஸ்ஆர் கெடாரம், ஈரோடு மற்றும் சேலம் மஞ்சள்.

பருவம்: தமிழ்நாட்டில் மே-ஜூன் மாதம் மிகவும் ஏற்ற பருவமாகும்.

மண் மற்றும் தட்பவெப்பம்: மஞ்சள் ஒரு வெப்பமண்டலப் பயிர். நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் இருமண்பாடு நிலம் மிகவும் ஏற்றது.

நிலம் தயாரித்தல்: நிலத்தை 3 அல்லது 4 முறை உழுது பண்படுத்தி, கடைசி உழவின்போது ஏக்கருக்கு 4 மெ.டன் மக்கிய தொழு உரம் இட்டு மண்ணுடன் நன்கு கலக்க வேண்டும். நிலத்தைச் சமப்படுத்திய பின் 45 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.

விதையளவு: ஏக்கருக்கு 800 கிலோ விரலி மற்றும் குண்டு விதை மஞ்சள்.

விதைநேர்த்தி: கிழங்கு அழுகல் நோய் வராமல் தடுக்க விதைக் கிழங்குகளை ஒரு லிட்டர் நீருக்கு 1 கிராம் கார்பண்டசிம் கலந்த கரைசலில் 10 நிமிடம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி ஊன்ற வேண்டும்.

விதைப்பு: நீர்ப்பாசனம் செய்து விதை மஞ்சளை பார்களின் ஓரத்தில் 15 செ.மீ. இடைவெளியில் 4 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும்.

ஒருங்கிணைந்த உர மேலாண்மை: அடியுரமாக கடைசி உழவில் ஏக்கருக்கு 4 டன் தொழு  உரத்துடன், 80 கிலோ வேப்பம்புண்ணாக்கு அல்லது கடலைப் புண்ணாக்கு, 10 கிலோ தழைச்சத்து தரவல்ல 22 கிலோ யூரியா, 24 கிலோ மணிச்சத்து தரவல்ல 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ சாம்பல்சத்து தரவல்ல 14 கிலோ பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். விதைக்கும் முன், ஏக்கருக்கு 12 கிலோ இரும்பு சல்பேட், 6 கிலோ துத்தநாக சல்பேட் இடவேண்டும். விதைத்த ஒரு மாதம் கழித்து ஏக்கருக்கு 4 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 4 கிலோ பாஸ்போபாக்டீரியா இடவேண்டும்.

மேலுரம்: மஞ்சள் ஊன்றிய 30, 60,90,120 மற்றும் 150-ம் நாள்களில் ஒவ்வொரு முறையும் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 14 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை மேலுரமாக இடவேண்டும்.

இலைவழி நுண்ணூட்டம் அளித்தல்: கிழங்கு பெருக்கும் தருணத்தில் நுண்ணூட்ட குறைபாடுகளைச் சரிசெய்ய 6 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் ஒரு நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் காலையில் தெளிந்த நீரை எடுத்து, 90 லிட்டர் தண்ணீர் சேர்த்து, 100 லிட்டர் கரைசலாக்கி, அக்கரைசலில் 150 கிராம் இரும்பு சல்பேட், 150 கிராம் துத்தநாக சல்பேட், 150 கிராம் போராக்ஸ், 150 கிராம் யூரியா கலந்து மாலையில் இலைவழி தெளிக்க வேண்டும். தேவைக்கேற்ப 25 நாள்கள் இடைவெளியில் இருமுறை இவ்வாறு தெளிக்கலாம்.

ஊடு பயிர்: வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை 10 செ.மீ. இடைவெளியிலும், துவரை, ஆமணக்கு போன்றவற்றை அதிக இடைவெளியிலும் ஊடுபயிராக சாகுபடி செய்து கூடுதல் லாபம் பெறலாம்.

களை நிர்வாகம்: விதை ஊன்றிய 30, 50, 120, 150-ஆம் நாள்களில் களையெடுக்க வேண்டும்.

மண் அணைத்தல்: 2-ஆவது மேலுரம் மற்றும் நான்காவது மேலுரம் இட்டவுடன் அவசியம் மண் அணைக்க வேண்டும்.

நீர்ப்பாசனம்: மஞ்சள் நடவுக்கு முன்பும், நட்ட 3-ஆம் நாள் உயிர் தண்ணீராகவும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்னர், மண்ணின் தேவைக்கேற்ப வாரம் ஒருமுறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

1. பூச்சிகள்:

அ. இலைப்பேன்- இதை கட்டுப்படுத்த 1 லிட்டர் நீருக்கு 2 மிலி டைமிதியேட்  அல்லது மிதைல் ஒ டெமெட்டான் கலந்து தெளிக்கவும்.

ஆ. கிழங்கு செதில் பூச்சி – ஏக்கருக்கு மக்கிய ஆட்டு எரு அல்லது கோழி எரு 2 டன் அடியுரமாகவும், 2 டன் மண் அணைக்கும்போதும் இடுவதும் இதைக் கட்டுப்படுத்த உதவும். கிழங்கு ஊன்றுமுன் ஒரு லிட்டர் நீருக்கு 2 மிலி பாசலோன் கலந்த கரைசலில் 15 நிமிடம் ஊறவைத்து ஊன்றுவதும் இப்பூச்சி தாக்குதலைத் தடுக்க உதவும். வயலில் கிழங்கு செதில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு 2 மிலி டைமிதியேட் அல்லது பாசலோனன் கலந்த கரைசலை வேர்ப்பாகம் நன்கு நனையும்படி ஊற்றவும்.

இ. நூற்புழு – வயலில் நூற்புழு தாக்குதல் காணப்படுமானால் வாழை, கத்தரி குடும்பப் பயிர்களுக்குப் பின், மஞ்சள் பயிரிடுவதைத் தவிர்க்கவும், செண்டுமல்லி எனப்படும் கேந்தி மலரை வயல் ஓரங்களில் பயிரிட்டால் நூற்புழு தாக்குதல் குறையும். நூற்புழு தாக்குதலைக் குறைக்க அடியுரமாக ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். மேலுரமாக ஒவ்வொரு முறை யூரியா இடும்பொழுதும் ஏக்கருக்கு 2 கிலோ வேப்பம் புண்ணாக்கு சேர்த்து இடவேண்டும்.

2. நோய்கள்: அ. கிழங்கு அழுகல் நோய் – இதைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு  இரண்டரை கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு கலந்த கரைசலை வேர்ப்பகுதி நன்கு நனையும்படி ஊற்றவும்.

ஆ. இலைத்தீயல் மற்றும் இலைப்புள்ளி நோய் – பாதிக்கப்பட்ட இலைகளைக் கிள்ளி எரித்துவிட வேண்டும்.

இதைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 கிராம் கார்பண்டசிம் அல்லது 400 கிராம் மாங்கோசெப் அல்லது 500 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு மருந்துகளில் ஒன்றைத் தெளிக்கவும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து 10 முதல் 15 நாள்கள் இடைவெளியில் 2 அல்லது 3 முறை மருந்துகளை மாற்றி மாற்றித் தெளிக்க வேண்டும்.

அறுவடை மற்றும் மகசூல்: 9-ஆம் மாதத்தில் மஞ்சள் பயிர் சாய ஆரம்பிக்கும். இலைகள் மஞ்சளாவதும், காய்வதும் அறுவடைக்கான அறிகுறிகளாகும். பச்சை மஞ்சள் ஏக்கருக்கு 10 முதல் 12 டன் வரை கிடைக்கும்.

விவசாயிகள் இத்தகைய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து மருத்துவப் பயன் கொண்ட மஞ்சள் சாகுபடியை மேற்கொணடு உன்னத லாபம் பெறலாம் என்றார் தி.சு.பாலசுப்பிரமணியன்.

thina malar News

Leave a comment