படர்கொடி காய்கறி சாகுபடி முறைகள்

Posted on

படர்கொடி காய்கறிகள் சாகுபடி முறைகள் குறித்து சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 1. சாம்பல் பூசணி என்ற தடியங்காய்: தண்ணீர் சத்து நிறைந்த தடியங்காய் என்று அழைக்கப்படும் சாம்பல் பூசணி பெனின்காசா ஹிஸ்பிடா என்ற தாவரவியல் பெயர் கொண்டது. மருத்துவ பயன்கள்: ஆயுர்வேத நூல்களில் இதன் மருத்துவ பயன்கள் மற்றும் சத்துகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. வைட்டமின் பி- 1 (தையமின்), வைட்டமின் பி- 3 (நியாசின்), வைட்டமின் – சி ஆகிய வைட்டமின்களையும், கால்சியம், பொட்டாசியம் ஆகிய தாதுக்களையும் கொண்டுள்ளது. அதிகளவில் உள்ள பொட்டாசியம் ஆரோக்கியமான ரத்த அழுத்தத்துக்கு உதவுகிறது. 96 சதவீத நீர்ச்சத்து கொண்ட சாம்பல் பூசணி எடை குறைப்புக்கு மிகவும் ஏற்ற உணவு. ஆயுர்வேதத்தில் உடல் ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும் டானிக்காக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வலிப்பு, மனநோய் போன்ற நரம்பு மூளை நோய்களையும் குணப்படுத்தும் மருந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரத்தன்மை காரணமாக அமிலத் தன்மை மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு மருந்து. ஆஸ்துமா, சிறுநீரகக்கல் ஆகியவற்றைக் குணப்படுத்துவதிலும் உதவுகிறது. 2. சர்க்கரை பூசணி என்ற பறங்கிக்காய்: இனிப்புச் சுவை கொண்ட பூசணிக்காய் என்று அழைக்கப்படும் பறங்கிக்காய் குகுர்பிட்டா மொச்சட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்டது. மருத்துவ பயன்கள்: குறைவான கலோரியும், கொழுப்பு இல்லாததாகவும் இது உள்ளதால் எடை குறைப்புக்கு மிகவும் ஏற்ற உணவு. நோய் எதிர்ப்பு சக்தி தரும் லியுடீன், சாந்தின், கரோட்டீன் ஆகிய ஆன்டி ஆக்சிடென்ட்களை கொண்டுள்ளது. அதிகளவில் வைட்டமின் – ஏ, குறிப்பிடத்தக்க அளவு வைட்டமின் – பி காம்ப்ளக்ஸ், சி, ஈ ஆகியவற்றையும் கொண்டுள்ளது. அதிகளவில் உள்ள வைட்டமின் – ஏ நுரையீரல் மற்றும் வாய்ப்புற்று நோய்க்கு எதிர்ப்பு சக்தி கொடுக்கிறது. இதில் உள்ள சியாசாந்தின் வயது முதிர்வின் காரணமாக வரும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. தாமிரம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்பு ஆகிய தாதுக்களையும் கொண்டுள்ளது. பூசணி விதைகள் புரதம், நியாசின், செலினியம் ஆகியவற்றுடன் உடல் நலனுக்கு உதவும் டிரிப்டோபேன் என்ற அமினோ அமிலத்தையும் கொண்டுள்ளது. சாகுபடி குறிப்புகள்: ரகங்கள்- தடியங்காய் என்ற சாம்பல் பூசணி:கோ 1, கோ 2, டயமண்ட் பி.எஸ்.எஸ். 603.பூசணி என்ற பறங்கி- கோ 1, கோ 2, அர்காசூர்யமுகி, அர்காசந்திரன், அர்ஜுனா, ஆஸ்திரேலியன் கிரீன். விதையளவு, இடைவெளி – தடியங்காய் என்ற சாம்பல் பூசணிக்கு ஏக்கருக்கு ஒரு கிலோ, வரிசைக்கு வரிசை 2 மீ, செடிக்குச் செடி 1.5 மீ. பூசணிக்கு ஏக்கருக்கு 400 கிராம். வரிசைக்கு வரிசை 2 மீ, செடிக்கு செடி 2 மீ. மற்ற சாகுபடி முறைகளும், பயிர் பாதுகாப்பு முறைகளும் இரண்டுக்கும் பொதுவானதாக அமைந்துள்ளன. பருவம் – டிசம்பர்- ஜனவரி, ஜூன்- ஜூலை. மண்வகை- அங்ககச் சத்து கொண்ட, கார அமிலத் தன்மை 6.5-7.5 கொண்ட நல்ல வண்டல் மண் ஏற்றது. விதைத்தல் – ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளூரோசன்ஸ் கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். மூன்றுமுறை நன்கு உழுது வரிசைக்கு வரிசை 2 மீ, செடிக்கு செடி 1.5 மீ இடைவெளியில் ஒரு கனஅடி அளவில் குழிகளை எடுத்து நீர்பாய்ச்சி குழிக்கு 5 விதைகள் ஊற்ற வேண்டும். தொடர்ந்து வாரம் ஒருமுறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். பின்னர் குழிக்கு 2 செடிகள் விட்டு களைத்துவிட வேண்டும். அடியுரம் – குழிக்கு 10 கிலோ தொழு உரம், 15 கிராம் யூரியா, 75 கிராம் சூப்பர் பாஸ்பேட், 20 கிராம் மூரேட் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும். மேலுரம் – விதைத்த 30-ஆம் நாள் குழிக்கு 20 கிராம் யூரியா மேலுரமாக இட வேண்டும். பின்செய் நேர்த்தி- இரண்டரை மிலி கலந்து பெறப்பட்ட 250 பி.பி.எம். எத்திரல் கரைசலை விதைத்த 15-ஆம் நாள் முதல், வாரம் ஒருமுறை வீதம் நான்குமுறை தெளிக்க வேண்டும். பூச்சிநோய் நிர்வாகம்: 1. வண்டுகள் மற்றும் இலை தின்னும் புழுக்கள்: ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மிலி மாலத்தியான் 50 ஈ.சி. அல்லது டைமிதியேட் 30 ஈ.சி. அல்லது மிதைல் ஓ டெமட்டான் 25 ஈ.சி. மருந்துகளில் ஒன்றை தெளிக்கவும். 2. பழ ஈ: நன்கு உழவு செய்து பழ ஈயின் கூட்டுப் புழுக்களை வெளிப்படுத்தி அழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். இப்பழ ஈயின் தாக்குதல் வெப்பக் காலத்தில் மிகக் குறைவாகவும், மழைக் காலத்தில் மிக அதிகமாகவும் இருக்கும். எனவே, அதற்கேற்ப விதைப்பு தேதியை நிர்ணயம் செய்ய வேண்டும். கருவாட்டுப்பொறி- ஒரு பாலித்தீன் பையில் 5 கிராம் நனைந்த கருவாடு, ஒரு மிலி டைக் குளோர்வாஸ் நனைத்த பஞ்சு வைத்த கருவாட்டு பொறிகளை ஏக்கருக்கு இருபது என்ற அளவில் வைத்து பழ ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். நோய்கள்: 1. புள்ளிச்சாம்பல் நோய்- ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மிலி டினோகாப் அல்லது அரை கிராம் கார்பண்டசிம் மருந்துகளில் ஒன்றை தெளிக்கவும். 2. அடிச்சாம்பல் நோய்: ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு கிராம் மாங்கோசெப் அல்லது குளோரோ தலானில் மருந்துகளில் ஒன்றை 10 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்கவும். எச்சரிக்கை – லிண்டேன் பூச்சிக்கொல்லி மற்றும் தாமிர, கந்தகப் பூசணக் கொல்லிகள் இப் பயிர்களுக்கு தாவர நச்சாகப் பயிரை பாதிப்பதால் அவற்றை உபயோகிக்கக் கூடாது. மகசூல்- 100-140 நாள்களில் ஏக்கருக்கு 10 டன் மகசூல் எடுக்கலாம். எனவே, விவசாயிகள் இந்த தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்து பூசணி வகைகளை சாகுபடி செய்து உயர் மகசூலும், லாபமும் பெற்றுப் பயனடையலாம் என்றார் அவர்.

Thinamalar news

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s